ads
மான்ஸ்டர் ஹன்டர் தமிழ் டப்பிங் பட விமர்சனம்
விக்னேஷ் (Author) Published Date : Feb 06, 2021 23:23 ISTபொழுதுபோக்கு
ஹாலிவுட் மூவி மான்ஸ்டர் ஹன்டர் 3டி தமிழில் டப்பிங் செய்து நேற்று தியேட்டர்களில் ரிலீஸ் ஆனது. மான்ஸ்டர் ஹன்டர் வீடியோ கேமை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட படம்.
ரெசிடென்ட் ஈவில் புகழ் நடிகை மிலா ஜோவோவிச்சும் இயக்குநராக அவரது கணவர் பால் ஆண்டர்சனும் இணைந்து உருவாக்கியிருக்கும் ஐந்தாவது படம் இது.
இரண்டு உலகிற்கு சென்று வர ஒரு நுழைவாயில் இருக்கிறது, மின்னல் புயலால் ஒரு உலகில் இருந்து வேறு உலகிற்கும் செல்லும் பூமியை சேர்ந்தவர்கள் என்ன ஆகிறார்கள், பின்பு மீண்டும் பூமிக்கு திரும்பினார்களா என்பது தான் மைய கதை.
காணாமல் போன ராணுவ வீரர்களைத் தேடி மிலா ஜோவோவிச் ஒரு பாலைவனப் பகுதிக்கு தனது குழுவுடன் செல்கிறார். இவர்களும் வீரர்கள் காணாமல் போன அந்த பகுதியில் ஏற்படும் மின்னல் புயலில் சிக்கி வேறு ஒரு உலகத்திற்குள் சென்று விடுகிறாள்.
எங்கு இருக்கிறோம் என்று யோசிக்கும் தருணத்தில் ஒரு ராட்சச மிருகம் பாலைவன மணலில் ஊடுருவி இவர்களை தாக்குகிறது. இவர்களுக்கு அந்த உலகை சேர்ந்த ஒரு வீரர் எச்சரிக்கை செய்தும், இவர்களில் சில வீரர்கள் மணலில் ஊடுருவும் ராட்சச மிருகத்திற்கும், விஷ சிலந்தி பூச்சிற்கும் இறையாகிறார்கள்.
தப்பிக்கும் ஒரு நபர் மிலா ஜோவோவிச், இவர் இந்த உலகத்தை சேர்ந்த டோனி ஜாவின் உதவியை நாடுகிறார். பூமிக்கு திரும்ப செல்லும் முயற்சியில் இவர்கள் ராட்சச மிருகங்களிடம் சந்திக்கும் பல்வேறு போராட்டங்கள் மற்றும் இவர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சிகள் தான் படத்தின் சுவாரஸ்யம்.
டைனோசர் போன்ற பெரிய ராட்சச மிருகங்களுடன் போடும் சண்டை காட்சிகள் பிரமாதம், டோனி ஜாவின் சண்டை காட்சிகள் மற்றும் இவரின் நடிப்பு ரசிக்கும்படி இருக்கிறது.
குழந்தைகள் மற்றும் அனைத்து வயதினரையும் கவரும் படமாக அமைந்துள்ளது. மிலா ஜோவோவிச்சின் ஆக்ஷன் காட்சிகள், இவரின் ஸ்டைல் சொல்லவேண்டிய அவசியம் இல்லை, அற்புதம்.
மான்ஸ்டர் ஹன்டர் படத்தை 3டியில் தொழில்நுட்பத்தில் உருவாக்கியுள்ளனர், ஆனால் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு 3டி விஷுவல் அந்த அளவிற்கு இல்லை. மற்றபடி எந்த ஒரு குறையும் இல்லை.
மான்ஸ்டர் ஹன்டர் வீடியோ கேமை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட படம் என்பதால், வீடியோ கேம் விளையாடுவதை போல இருக்கும் என்பதாக நினைக்க வேண்டாம். குழந்தைகளுடன் பார்க்கும் அளவிற்கு ரசிக்கும்படி உள்ளது.