ads
விக்கிபீடியாவுக்குப் போட்டியாக வரும் குரோக்பீடியா
புருசோத்தமன் (Author) Published Date : Oct 29, 2025 14:50 ISTதொழில்நுட்பம்
இணையத்தில் தகவல்களின் மிகப்பெரிய களஞ்சியமாக விளங்கும் விக்கிபீடியாவுக்குப் போட்டியாக, அமெரிக்கத் தொழிலதிபர் எலான் மஸ்க் அவர்கள் குரோக்பீடியா என்ற புதிய செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் இயங்கும் கலைக்களஞ்சியத்தை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளார். மஸ்கின் xAI நிறுவனம் இதனை வடிவமைத்துள்ளது.
பொதுமக்கள், பிரபலங்கள், நாடுகள் மற்றும் பல்வேறு விஞ்ஞான விஷயங்கள் பற்றிய தகவல்களை இணையம் மூலமாகத் தெரிந்துகொள்ள விக்கிபீடியா ஒரு நம்பகமான தளமாக இருந்து வருகிறது. ஆனால், விக்கிபீடியா பக்கங்களில் அரசியல் சாய்வு இருப்பதாகவும், அது பக்கச்சார்பாக இருப்பதாகக் கூறி எலான் மஸ்க் நீண்ட காலமாகவே அதை விமர்சித்து வந்தார். எனவே, உண்மை மற்றும் பாரபட்சமற்ற அறிவை வழங்கும் நோக்கத்துடன் குரோக்பீடியாவை உருவாக்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். பிரபஞ்சத்தைப் புரிந்துகொள்வதற்கான ஒரு அவசியமான படி இது என்றும் அவர் கூறியுள்ளார்.
குரோக்பீடியா, மஸ்கின் xAI நிறுவனத்தின் குரோக் என்ற உரையாடல் செயற்கை நுண்ணறிவு மாதிரியால் முழுமையாக இயக்கப்படுகிறது. விக்கிபீடியா லட்சக்கணக்கான தன்னார்வ மனிதப் பங்களிப்பாளர்களை நம்பியிருக்கும் நிலையில், குரோக்பீடியாவின் உள்ளடக்கத்தை குரோக் ரோபோவே உருவாக்கி, பராமரித்து, புதுப்பிக்கிறது. இது ஒரு சுய கற்றல் மற்றும் சுய புதுப்பித்தல் தளமாகச் செயல்படும் என மஸ்க் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் தரவு உருவாக்கம் மற்றும் புதுப்பித்தல் வேகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது, குரோக்பீடியா v0.1 என்ற ஆரம்பநிலைச் சோதனைப் பதிப்பு இணையதளத்தில் நேரலைக்கு வந்துள்ளது. தற்போது இதில் சுமார் 8,85,000 கட்டுரைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆங்கில விக்கிபீடியாவில் 7 மில்லியனுக்கும் அதிகமான கட்டுரைகள் உள்ள நிலையில், இது ஒரு சிறிய தொடக்கமே. இருப்பினும், இந்த v0.1 பதிப்பே விக்கிபீடியாவை விடச் சிறந்தது என நான் நினைக்கிறேன், என்று பதிவிட்டுள்ளார்.
விக்கிபீடியாவில் யார் வேண்டுமானாலும் கட்டுரைகளைத் திருத்தவும், தகவல்களைச் சேர்க்கவும் முடியும். ஆனால், குரோக்பீடியாவில் தற்போது மனித பயனர்கள் நேரடியாக உள்ளடக்கத்தைத் திருத்த அனுமதிக்கப்படவில்லை. கட்டுரைகளில் ஏதேனும் பிழைகள் இருந்தால், திருத்தங்களுக்கான கோரிக்கையைச் சமர்ப்பிக்க ஒரு படிவம் உள்ளது. இந்தக் கோரிக்கைகளை குரோக் ஏ.ஐ. ஆய்வு செய்து, மாற்றங்களைச் செய்யும். இது பிழையான தகவல்களைக் குறைக்கும் நோக்கம் கொண்டது என்றாலும், விக்கிபீடியாவைப் போல் சமூகத்தின் கூட்டுப் பங்களிப்புக்கு இதில் அதிக இடமில்லை.
கடந்த இரண்டு தசாப்தங்களாக, விக்கிபீடியா உலகளாவிய டிஜிட்டல் அறிவுக்கான தரநிலையாக இருந்து வருகிறது. தேடுபொறி முடிவுகள், ஏ.ஐ. பயிற்சித் தரவு என அதன் தாக்கம் மிகவும் பெரியது. இந்த நிலையில், குரோக்பீடியாவின் வருகை ஏ.ஐ. துறையில் ஒரு பெரிய திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது. செயற்கை நுண்ணறிவு ஒரு கூட்டு அறிவுத் தளத்திற்குப் போட்டியாக நிற்க முடியுமா அல்லது அதை மாற்றியமைக்க முடியுமா என்ற பெரிய விவாதத்தை இது எழுப்பியுள்ளது.
