ads

வெள்ள அபாயத்தை முன்கூட்டியே எச்சரிக்கும் புதிய தொழில்நுட்பம்

சென்னையில் வெள்ள அபாயங்களை முன்கூட்டியே அறிவதற்கு புதிய தொழில்நுட்பத்தை ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

சென்னையில் வெள்ள அபாயங்களை முன்கூட்டியே அறிவதற்கு புதிய தொழில்நுட்பத்தை ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

கனமழையால் ஏற்படும் வெள்ளம் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த ஆண்டு குறிப்பாக கேரளா மற்றும் கர்நாடகாவில் பெய்த கனமழையால் மாநிலம் முழுவதுமே வெள்ளத்தில் தத்தளித்தது. இந்த வெள்ளத்தில் சிக்கி பாதுகாப்பான இடத்திற்கு செல்ல முடியாமல் 500க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். சென்னையில் 2015இல் ஏற்பட்ட வெள்ளத்தை மறந்திருக்க முடியாது. எந்தவித முன்னறிவிப்பும் இன்றி செம்பரம்பாக்கம் ஏறி நிரம்பியதால் திடீரென அணையை திறந்து விட்டனர்.

இதனால் சென்னை முழுவதுமே வெள்ளத்தில் மூழ்கியது. இந்த சம்பவத்தில் ஏற்பட்ட இழப்புகளில் இருந்து இன்னும் பொது மக்கள் மீளவில்லை. அந்த சம்பவத்தின் போது முன்கூட்டியே அறிவிப்பு விடுத்திருந்தால் இவ்வளவு இழப்புகள் நேர்ந்திருக்காது என்று மக்கள் குற்றம் சாட்டி வந்தனர். தற்போது இது போன்ற சம்பவங்கள் இனியும் நடைபெறாமல் இருக்க சென்னை கடலோர தேசிய ஆய்வு மைய ஆய்வாளர்கள் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர்.

இதன் மூலம் வெள்ளம் ஏற்படும் அபாயங்களை ஒரு வாரத்திற்கு முன்னதாகவே அறிந்து கொள்ளலாம். இதனை கொண்டு வெள்ளம் ஏற்படும் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வெள்ளம் வருவதற்கு முன்னதாகவே மேற்கொண்டு பல உயிர்களை காப்பாற்றலாம். இந்த தொழில்நுட்பம் மூலம் எச்சரிக்கை மட்டுமல்லாமல் எந்த பகுதியில் வெள்ளம் வரப்போகிறது என்பதையும் அதிலிருந்து வெளியேறுவதற்கான வழியையும் துல்லியமாக காட்டும் வல்லமை கொண்டது.

இதனை பெறுவதற்கு கடல் சீற்றம் மற்றும் வானிலை குறித்த தகவல்களை மட்டும் அளித்தால் போதும் அடுத்த அரை மணிநேரத்தில் வெள்ள அபாய எச்சரிக்கை முடிவுகளை வழங்கிவிடும். எண்ணியல் முறையில் இயங்கும் இந்த தொழில்நுட்பத்தில் எச்சரிக்கை முடிவுகள் மேப்கள், எழுத்துக்கள் அல்லது எண்கள் அல்லது 3D முறையிலும் வழங்கும். இதன் சோதனை முயற்சி வெற்றி அடைந்த நிலையில் இதனை செயல்படுத்த மாநில அரசுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகும் நிலையில் உள்ளது. வரவுள்ள வடகிழக்கு பருவ மழை காலங்களில் இந்த தொழில்நுட்பத்தை செயல்படுத்த உள்ளனர்.

வெள்ள அபாயத்தை முன்கூட்டியே எச்சரிக்கும் புதிய தொழில்நுட்பம்