ads
வரலாற்று சாதனையுடன் இந்திய அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது
ராசு (Author) Published Date : Oct 31, 2025 09:41 ISTSports News
நேற்று (அக்டோபர் 30, 2025) மும்பையில் நடைபெற்ற ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், இந்திய மகளிர் அணி, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அந்த அணியின் வீராங்கனைகள் அபாரமாக விளையாடி, இந்திய பந்துவீச்சை சிதறடித்தனர். போப் லிட்ச்ஃபீல்ட் 119 ரன்களும், எலிஸ் பெர்ரி 77 ரன்களும், ஆஷ்லிக் கார்ட்னர் 63 ரன்களும் குவித்தனர். இதன் விளைவாக, ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 338 ரன்கள் என்ற இமாலய இலக்கை இந்தியாவிற்கு நிர்ணயித்தது.
339 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கம் சற்று தடுமாற்றமாகவே இருந்தது. இருப்பினும், அடுத்து களமிறங்கிய வீராங்கனைகள் நம்பிக்கையுடன் விளையாடினர். துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா 24 ரன்களில் ஆட்டமிழக்க, ஜெமிமா ரோட்ரிக்ஸ் பொறுப்புடன் விளையாடினார். அவருக்கு துணையாக கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 88 பந்துகளில் 89 ரன்கள் எடுத்து சிறப்பான பங்களிப்பை வழங்கினார்.
மிகவும் சிறப்பாக விளையாடிய ஜெமிமா ரோட்ரிக்ஸ், 134 பந்துகளில் 127 ரன்கள் (நாட் அவுட்) குவித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். தீப்தி சர்மா (24) மற்றும் ரிச்சா கோஷ் (26) ஆகியோரின் முக்கியப் பங்களிப்பும் வெற்றிக்கு உதவியது. இந்திய அணி 48.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 341 ரன்கள் எடுத்து, ஆஸ்திரேலியாவின் கனவை தகர்த்து வெற்றி பெற்றது.
மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிகபட்ச ரன் சேஸ் செய்த அணி என்ற சாதனையை இந்திய அணி படைத்துள்ளது. இதற்கு முன், இதே உலகக் கோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியா 331 ரன்களை சேஸ் செய்ததே சாதனையாக இருந்தது. அதை முறியடித்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவே 339 ரன்களை சேஸ் செய்து இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.
அபார வெற்றி பெற்ற இந்திய மகளிர் அணி, வரும் நவம்பர் 2 ஆம் தேதி மும்பையில் நடைபெறும் இறுதிப் போட்டியில், முதல் அரையிறுதியில் இங்கிலாந்தை வீழ்த்தி முன்னேறியுள்ள தென்னாப்பிரிக்கா அணியை எதிர்கொள்ள உள்ளது.
