ads
தமிழ்நாட்டை உலுக்கிய கோவை கல்லூரி மாணவி கூட்டு பலாத்காரம்
புருசோத்தமன் (Author) Published Date : Nov 03, 2025 18:07 ISTஇந்தியா
தமிழகத்தையே உலுக்கியுள்ள அதிர்ச்சி சம்பவம், கோவை சித்ரா விமான நிலையத்தின் பின்புறம் உள்ள ஒதுக்குப்புறமான பகுதியில் முதலாமாண்டு கல்லூரி மாணவி (19) கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட கொடூரம் அரங்கேறியுள்ளது. இந்தச் சம்பவம் நேற்று (நவம்பர் 2, 2025, ஞாயிற்றுக்கிழமை இரவு) நடந்ததாகக் கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட மாணவி, நேற்று இரவு தனது ஆண் நண்பருடன் காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று இளைஞர்கள் கொண்ட கும்பல் அவர்களை வழிமறித்துள்ளது. கொடூரர்கள் முதலில் மாணவி மற்றும் அவரது நண்பர் இருந்த காரின் கண்ணாடியை உடைத்து பீதியை ஏற்படுத்தியுள்ளனர். மேலும், மாணவியின் ஆண் நண்பரைத் தீவிரமாக அரிவாளால் தாக்கி காயப்படுத்திய அந்தக் கும்பல், அவரை அங்கிருந்து விரட்டி அடித்துள்ளனர்.
ஆண் நண்பரைத் தாக்கிவிட்டு, அந்தக் கும்பல் மாணவியைக் காரில் இருந்து வலுக்கட்டாயமாகத் தூக்கிச் சென்றுள்ளது. ஆள் நடமாட்டம் இல்லாத வேறொரு பகுதிக்கு அவரைக் கடத்திச் சென்று, மூன்று பேரும் சேர்ந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு குறித்து இந்தக் கொடூரச் சம்பவம் கேள்விகளை எழுப்பியுள்ளது.
இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த மாணவியின் ஆண் நண்பர் உடனடியாக காவல்துறைக்குத் தகவல் அளித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார், மாணவியைத் தீவிரமாகத் தேடி மீட்டுள்ளனர். தற்போது பாதிக்கப்பட்ட மாணவியும், அவரது ஆண் நண்பரும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருவரும் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள கோவை மாநகர போலீஸார், குற்றவாளிகளை விரைவில் பிடிக்க 7 தனிப்படைகளை அமைத்து தீவிரத் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் சிசிடிவி காட்சிகள் இல்லாததால், குற்றவாளிகளைக் கைது செய்வதில் சவால்கள் நிலவினாலும், காவல்துறை விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளது.