ads

நயன்தாராவுடன் மோதும் தமன்னா, ஒரே நாளில் மோதுமா இருமொழி திரைப்படங்கள்?

கொலையுதிர் காலம், காமோக்ஷி

கொலையுதிர் காலம், காமோக்ஷி

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிப்பில் சக்ரி டோலெட்டி இயக்கத்தில் த்ரில்லர் பாணியில் தயாராகி இருக்கும் படம் தான் கொலையுதிர் காலம்.  2015ல் வெளியான திகில் படமான மாயாவின் வியத்தகு வெற்றியை தொடர்ந்து ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் தரும் படங்களிலேயே தொடர்ந்து நடித்து வரும் நயன்தாரா. தமிழ் வெற்றிப் படங்களின் நாயகியாக விளங்குகிறார், நயன். சமீபத்தில் வெளியான ஹாரர் த்ரில்லர் படமான ஐரா எதிர்பார்த்த வெற்றியை அடையாததால் வருத்தத்தில் இருக்கும் நயன்தாராவிற்கு இந்தப் படம் மீண்டும் புத்துணர்வைக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இவருடைய மார்க்கெட் ஏறுமுகமாகவே உள்ளது.

கொலையுதிர் காலம் படத்தின் படப்பிடிப்பு 2016லேயே தொடங்கி விட்டது. ரசிகர்களை குஷியூட்டும் விதத்தில், இந்தப் படத்திற்கான முதல் போஸ்டர் 18 நவம்பர் 2016, நயன்தாரா பிறந்த நாளன்று வெளியானது. முதன் முறையாக, இசை அமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, இந்தப் படத்தை பூஜா என்டேர்டைன்மெண்ட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறார். இந்த நிறுவனத்திற்கும் இதுவே முதல் படம் ஆகும். இந்தப் படத்தில், நயனுடன் பூமிகா, பிரதாப் போத்தன் உடன் நடிக்கிறார்கள். எக்ஸ்ட்ரா என்டேர்டைன்மெண்ட் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.

இந்நிலையில், காமோக்ஷி என்ற பெயரில், ஹிந்தியிலும் இந்த படம் ரீமேக் ஆகிறது. அதில், நயன்தாரா ரோலில் தமன்னா நடிக்கிறார். பிரபு தேவா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தமிழில் இயக்கிய சக்ரி டோலிட்டியே இந்தப் படத்தை ஹிந்தியிலும் இயக்குகிறார். இந்நிலையில், இந்த இரு படங்களும் மே 31ம் தேதி வெளிவரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஒரிஜினல் வெர்சனான கொலையுதிர் காலம் வெளிவரும் முன்பே அதன் ரீமேக் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. இதனால, நயன்தாரா படத்திற்கு நஷ்டம் ஏற்பட வாய்ப்பு அதிகம். தமன்னா, பிரபுதேவா நடிப்பில் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகி இருக்கும் தேவி 2 படமும் மே 31ம் தேதி வெளியாவதால் காமோக்ஷி படம் முன்னதாகவே ரிலீஸ் செய்யப்படுகிறது என்று சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன. இதனால், நயன்தாராவின் கொலையுதிர் காலம் படத்திற்கு வர்த்தக ரீதியில் பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.

நயன்தாராவின் மாயா படம் 2015ல் திகிலூட்டும் வெற்றியை பதிவு செய்தது போல தமன்னாவின் தேவி படமும் 2016ல் திகில் மற்றும் நகைச்சுவைத் திரைப்படமாக மூன்று மொழிகளில் வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில், தமன்னா, பிரபுதேவா, சோனு சூத், ஆர்.ஜே. பாலாஜி ஆகியோர் நடித்துள்ளனர். இரண்டு வெவ்வேறுபட்ட கதாபாத்திரங்களில் பின்னி எடுத்த தமன்னா, தேவி 2 படத்திலும் தனக்கான முத்திரையை மீண்டும் பதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மாத வெளியீடுகளில், தமன்னாவின் இரு படங்கள் பாக்ஸ் ஆபீஸ் கலக்ஷனை அள்ளுமா அல்லது நீண்ட நாட்கள் கழித்து திரைக்கு வரும் நயன்தாராவின் கொலையுதிர் காலம் வெற்றி பெறுமா என்ற கேள்வி தமிழ் திரையுலக ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. மேலும், மே 31ம் தேதி, சூர்யாவின் என் ஜி கே படமும் திரைக்கு வர இருப்பதால் நயனின் படத்திற்கு மேலும் போட்டி அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நயன்தாராவுடன் மோதும் தமன்னா, ஒரே நாளில் மோதுமா இருமொழி திரைப்படங்கள்?