ads

சொற்களின் ஜாம்பவானாக கிரேஸி மோகன் மாரடைப்பால் இன்று மரணத்தை தழுவினார்

சாக்லேட் கிருஷ்ணா கிரேசி மோகன்

சாக்லேட் கிருஷ்ணா கிரேசி மோகன்

புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளரும், நகைச்சுவை நடிகருமான கிரேஸி மோகன் (67) அவர்கள் மாரடைப்பால் இன்று காலமானார். மோகன் ரங்காச்சாரி என்ற இயற்பெயர் கொண்ட அவர் ஒரு சிறந்த திரைப்பட மற்றும் நாடக கலைஞராவார், மேலும் ஒற்றை வரி நகைசுவைகளில் வல்லவர். இன்று கடுமையான மாரடைப்பால் பாதிக்கப்பட்ட அவர் சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் மதியம் அனுமதிக்கப்பட்டார். மூச்சுத்திணறல் ஏற்பட்ட அவருக்கு உயிர்த்தெழுப்ப முயற்சிகள் செய்யப்பட்டது, இருந்தும் சிகிச்சை பலனின்றி இன்று மதியம் 2 மணி அளவில் உயிர் பிரிந்ததாக மருத்துவ நிர்வாகிகளால் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

1952 ஆம் ஆண்டு பிறந்த கிரேஸி மோகன் அவர்கள் பொறியியல் கல்லூரியில் இயந்திர பொறியியல் படிப்பை 1973 ஆம் ஆண்டு முடித்தார். உரையாசிரியர் பணியை தனது கல்லூரி காலத்திலேயே தொடங்கி விட்டார். தனது மூத்த சகோதரரான மாது பாலாஜியின் நாடக குழுவிற்கு கதைகளையும், வசனங்களையும் எழுத தொடங்கினர். கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான பொய்க்கால் குதிரை படத்தில் வசனகர்த்தாவாக அறிமுகம் ஆனார்.

6500 கும் மேற்பட்ட மேடை நாடகங்கள், முப்பதற்கு மேற்பட்ட நாடகங்களை இயற்றி, நாற்பதற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து நூற்றுக்கும் மேற்பட்ட குறும் கதைகளை எழுதியுள்ளார். எழுத்தாளராகவும் மட்டும் இல்லாமல் சிறந்த ஓவியராகவும் இருந்துள்ளார். ஒற்றை வரி வெண்பாக்களை எழுதுவதில் வல்லவர். தினமும் ஒரு வெண்பாவை எழுதும் பழக்கம் கொண்ட அவர் இன்று வரை 40 ஆயிரம் வெண்பாக்களை எழுதியுள்ளார்.

கிரேஸி தீவ்ப்ஸ் இன் பாலவாக்கம் என்ற நாடகத்தை முழுமையாக எழுதினார். அன்று முதல் கிரேஸி என்ற அடைமொழி பெற்று கிரேஸி மோகன் என அழைக்கப்பட்டார். அவரது நாடகமான சாக்லேட் கிருஷ்ணா இன்று வரை 500 முறைக்கு மேல் அரங்கேறியுள்ளது. 1979 ஆம் ஆண்டு கிரேஸி கிரியேஷன்ஸ்  தொடங்கப்பட்டது. சிலேடை வார்தைகளை பயன்படுத்துவதில் வல்லவரான இவர் தனது நகைச்சுவை வசனங்களால் சிரிக்க தெரியாதவர்களை கூட சிரிக்க வைத்து விடுவார்.

கலைமாமணி விருது பெற்ற அவர் உலகநாயகனின் பல படங்களில் கைகோர்த்து உள்ளார். பஞ்சதந்திரம், காதலா காதலா, மைக்கேல் மதன காம ராஜன், அவ்வை சண்முகி, வசூல் ராஜா எம்பிபிஎஸ் போன்ற படங்களில் நகைச்சுவை நடிகராக வலம் வந்துள்ளார். பல திறமைகளால் பலரை வியக்க வைத்து, தனது நகைச்சுவையால் அனைவரையும் சிரிக்க வைத்த மாபெரும் கலைஞரின் வாழ்வு இன்று முடிவிற்கு வந்தது. ரசிகர்களின் பிராத்தனைகள் இத்தலைசிறந்த கலைஞருக்கு சமர்ப்பணம். 

சொற்களின் ஜாம்பவானாக கிரேஸி மோகன் மாரடைப்பால் இன்று மரணத்தை தழுவினார்