ads
அனிருத் மற்றும் சிவகார்த்திகேயனை வெளிப்படையாக தாக்கிய தனுஷ்
ராம் குமார் (Author) Published Date : Sep 17, 2025 17:29 ISTபொழுதுபோக்கு
சமீபத்தில் நடைபெற்ற இட்லி கடை படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில், நடிகர் தனுஷ் மற்றும் அவரது மேலாளர் ஸ்ரேயஸ் ஆகியோரின் சர்ச்சைக்குரிய பேச்சு சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விழாவில் ஸ்ரேயஸ் பேசும்போது பிரபலம் ஆவதற்கு இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று, கடினமாக உழைத்து, ரத்தம் சிந்தி, வியர்வை சிந்தி மேலே வருவது. மற்றொன்று, ஏற்கனவே பிரபலமாக இருப்பவர்களைத் தாக்கி மேலே வருவது என்று குறிப்பிட்டார். மேலும், தனுஷை வளர்த்துவிட்டவர்களே இப்போது அவருக்கு எதிராக இருக்கிறார்கள். நேரடியாக மோத வேண்டும். அதை விடுத்து பி.ஆர். டீம் மூலம் மோதக் கூடாது என்றும் பேசினார். தொடர்ந்து, நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய டிடி, தனுஷிடம் துரோகம் என்றால் என்ன? என்று கேட்டபோது, அதற்கு தனுஷ், பழகிவிட்டது என்று ஒரு வரியில் பதிலளித்தார்.
இந்த பேச்சுகள் சமூக வலைத்தளங்களில் பல விவாதங்களை உருவாக்கியுள்ளன. இந்த கருத்துக்கள் விக்னேஷ் சிவன், சிவகார்த்திகேயன் மற்றும் அனிருத் ஆகியோரை நோக்கியே இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். விக்னேஷ் சிவன் இயக்கிய சமீபத்திய படத்தின் டீசரில், சிலர் உங்களை வளர்த்துவிட்டதாகக் கூறி, பிறகு உங்களையே தங்கள் வளர்ச்சிக்கு பயன்படுத்துவார்கள் என்ற வசனம் இடம்பெற்றிருந்தது. இந்த வசனம் தனுஷை குறிப்பதாக சிலரால் விவாதிக்கப்பட்ட நிலையில், ஸ்ரேயஸின் பேச்சு இதற்கு ஒரு பதிலடி என்று பார்க்கப்படுகிறது.
அதேபோல், இந்த பேச்சு சிவகார்த்திகேயனையும், அனிருத்தையும் குறிப்பதாக சில ரசிகர்கள் கருதுகின்றனர். ஒரு காலத்தில் தனுஷும் சிவகார்த்திகேயனும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். ஆனால், சில வருடங்களுக்கு முன் இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால், அவர்களின் உறவில் விரிசல் ஏற்பட்டது. எனவே, தனுஷின் பேச்சுகள் சிவகார்த்திகேயனைக் குறிப்பதாக சிலர் கூறுகின்றனர். இதேபோல், தனுஷ் மற்றும் அனிருத் இருவரும் பல வெற்றிப் படங்களில் இணைந்து பணியாற்றி, நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இருவரும் எந்தப் படத்திலும் இணைந்து பணியாற்றவில்லை. இதனால், இந்த சர்ச்சையில் அனிருத்தின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது.