சுவிட்சர்லாந்தின் தென்மேற்குப் பகுதியில் உள்ள பிரபல கிரான்ஸ் மொன்டானா பனிச்சறுக்கு விடுதியில், புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடங்கிய சில நிமிடங்களிலேயே ஒரு பாரில் (Bar) பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சுமார் 40 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 115 பேர் படுகாயமடைந்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

லெ கான்ஸ்டலேஷன் என்ற அந்த பாரில் நள்ளிரவு 1:30 மணியளவில் தீப்பிடித்தது. இங்கு இளைஞர்கள் அதிகளவில் கூடும் என்பதால், பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பதின்பருவ இளைஞர்கள் எனத் தெரியவந்துள்ளது. இரண்டு தளங்களைக் கொண்ட இந்த பாரில், குறுகிய படிக்கட்டுகள் இருந்ததால் மக்கள் தப்பிக்க முடியாமல் திணறியுள்ளனர்.

தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. ஷாம்பெயின் பாட்டில்களில் வைக்கப்பட்டிருந்த தீப்பொறி மெழுகுவர்த்திகள் மரத்தாலான மேற்கூரையில் பட்டதால் தீ வேகமாகப் பரவியிருக்கலாம் என நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர். மிகக் குறுகிய கால இடைவெளியில் தீ மளமளவெனப் பரவியதால் இந்த உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்து குறித்து சுவிஸ் அதிபர் கய் பார்மெலின் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். நமது நாடு சந்தித்த மிக மோசமான துயரங்களில் இது ஒன்று, என அவர் வருத்தம் தெரிவித்துள்ளார். தற்போது அந்த விடுதி முழுவதும் சோகத்தில் மூழ்கியுள்ள நிலையில், பாதுகாப்பு விதிமுறைகள் சரியாகப் பின்பற்றப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை தீவிரமடைந்துள்ளது.