உலகளாவிய ஓடிடி தளங்களில் முன்னணி நிறுவனமான நெட்ஃபிலிக்ஸ், ஹாலிவுட் திரைப்படத் தயாரிப்பு மற்றும் பொழுதுபோக்குத் துறையின் ஜாம்பவான் நிறுவனமான Warner Bros Discovery வாங்குவதற்கான தீவிரப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. இந்த மெகா டீலின் மதிப்பு இந்திய மதிப்பில் சுமார் ₹6 லட்சம் கோடிக்கும் மேலான, கிட்டத்தட்ட $72 பில்லியன் டாலர் ஆகும்.

நெட்ஃபிலிக்ஸ் டீல் பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்த நிலையில், இதில் ஒரு எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஹாலிவுட்டின் மற்றொரு முக்கிய நிறுவனமான Paramount தற்போது Warner Bros நிறுவனத்தை வாங்குவதற்கான போட்டியில் குதித்துள்ளது. இது ஹாலிவுட் வட்டாரத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாரமவுண்ட்டின் இந்த முயற்சிக்கு பக்கபலமாக, மற்றொரு சக்திவாய்ந்த ஊடக நிறுவனமான Skydance Media இணைந்துள்ளது. இதனால், Warner Bros ஐ வாங்குவதற்கான போட்டியில் ஒருபுறம் நெட்ஃபிலிக்ஸ் தனியாகவும், மறுபுறம் Paramount -Skydance Media என்ற வலுவான கூட்டணி இணைந்தும் களத்தில் உள்ளன.

நெட்ஃபிக்ஸ் நிறுவனம் இந்த டீல் குறித்த பேச்சுவார்த்தையின்போது ஒரு முக்கிய நிபந்தனையை விதித்துள்ளது. அதாவது, நெட்ஃபிலிக்ஸ் கடைசி நேரத்தில் இந்த ஒப்பந்தத்திலிருந்து பின்வாங்கினால், வார்னர் ப்ரோஸ் நிறுவனத்திற்கு சுமார் $5 பில்லியன் டாலர் (தோராயமாக ₹41,000 கோடி) வரை அபராதம் செலுத்த வேண்டும். இந்த நிபந்தனை, டீலில் நெட்ஃபிக்ஸின் தீவிரத்தைக் காட்டுவதாகக் கருதப்படுகிறது.

Warner Bros நிறுவனத்திடம் இருக்கும் முக்கியமான கேரக்டர்களின் உரிமைகள் யாருக்குச் சொந்தமாகும் என்பதுதான் இதில் உள்ள முக்கிய ஈர்ப்பாகும். பேட்மேன், சூப்பர்மேன் போன்ற DC சூப்பர் ஹீரோக்கள், பென் 10, லூனி ட்யூன்ஸ் போன்ற புகழ்பெற்ற கார்ட்டூன்கள், மேலும் கான்ஜூரிங் போன்ற ஹாரர் படங்களின் உரிமைகளும் இந்த டீலின் மூலம் நெட்ஃபிக்ஸ் அல்லது பாரமவுண்ட் நிறுவனத்தின் கன்டென்ட் லைப்ரரிக்குள் வந்து சேரும். இந்த மெகா டீல் ஹாலிவுட்டின் எதிர்காலத்தை மாற்றி அமைக்கும் என்பதால், இந்த நிறுவனப் போட்டியின் முடிவு உலகளாவிய ஊடகங்களால் உன்னிப்பாகக் கவனிக்கப்படுகிறது.