மெக்சிகோ நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள ஓக்ஸாகா மாகாணத்தில் நேற்று மாலை ஒரு பயங்கர ரயில் விபத்து நிகழ்ந்துள்ளது. பசிபிக் பெருங்கடல் மற்றும் மெக்சிகோ வளைகுடாவை இணைக்கும் இன்டர் ஓசியானிக் பயணிகள் ரயில், நிசாண்டா என்ற நகருக்கு அருகே ஒரு வளைவில் திரும்பும்போது திடீரென தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்தச் சோகமான சம்பவத்தில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்தின் போது ரயிலில் மொத்தம் 241 பயணிகள் மற்றும் 9 ஊழியர்கள் என 250 பேர் இருந்தனர். இதில் 98 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் 36 பேர் அருகில் உள்ள மாத்தியாஸ் ரோமெரோ மற்றும் சலினா குரூஸ் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்தில் சிக்கியவர்களில் 5 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்தவுடன், மெக்சிகோ கடற்படை, ராணுவம் மற்றும் மீட்புக் குழுவினர் சுமார் 360 வீரர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ட்ரோன்கள், ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ்கள் மற்றும் தரைவழி ஆம்புலன்ஸ்கள் உதவியுடன் மீட்புப் பணிகள் நள்ளிரவு வரை நீடித்தன. மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷீன்பாம் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
விபத்து நடந்தபோது ரயில் மிக அதிக வேகத்தில் சென்றதே தடம் புரளக் காரணமாக இருக்கலாம் என்று தப்பிப்பிழைத்த பயணிகள் சிலர் தெரிவித்துள்ளனர். இருப்பினும், இயந்திரக் கோளாறு அல்லது தண்டவாளப் பராமரிப்புக் குறைபாடு ஏதும் உள்ளதா என்பதைக் கண்டறிய மெக்சிகோ தலைமை வழக்கறிஞர் அலுவலகம் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளது.

