உலகை திரும்பி பார்க்க வைத்த ஹானர் ரோபோட் போன்
ராசு (Author) Published Date : Oct 25, 2025 14:15 ISTworld news
நாம் அனைவரும் சாதாரணமாகப் பயன்படுத்தும் கேமரா போன்களைப் பார்த்திருப்போம். ஆனால், சீன நிறுவனமான ஹானர் (Honor), முற்றிலும் வித்தியாசமான ஒரு புதுமையான மொபைல் போனை அறிமுகப்படுத்த இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
ஹானர் ரோபோட் போன் (Honor Robot Phone) என்று அழைக்கப்படும் இந்த மொபைல், வழக்கமான கேமராவைக் கொண்டிருக்காமல், ரோபோட்டிக் கேமராவைக் கொண்டிருக்கிறது. இது ஒரு சாதாரண பாப்-அப் கேமராவைப் போல இல்லாமல், ஜிம்பல் (Gimbal) போன்ற அமைப்புடன் கூடிய இயங்கக்கூடிய கரத்துடன் (Robotic Arm) வருகிறது.
இந்த கேமரா, அதிநவீன செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்துடன் இணைக்கப்பட்டு, ஆட்டோமேஷன் முறையில் செயல்படக்கூடியதாக உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், நாம் இருக்கும் சூழலுக்கு ஏற்பவோ அல்லது நாம் செய்யும் அசைவுகளுக்கு ஏற்பவோ இந்த பாப்-அப் கேமரா அசைந்து, துல்லியமான காட்சிகளைப் படம்பிடிக்கும் திறன் கொண்டது.
உதாரணமாக, இது ஒருவரை பின்தொடர்ந்து வீடியோ எடுப்பது, குழந்தைகளுடன் விளையாடுவது, ஏன், ஒருவர் அணிந்திருக்கும் ஆடையைக்கூட அலசிப் பார்ப்பது போன்ற பல சுவாரஸ்யமான அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. ஹானர் நிறுவனம் தனது இந்த எதிர்கால மொபைலை 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பார்சிலோனாவில் நடைபெறும் MWC (Mobile World Congress) நிகழ்வில் உலகளவில் அறிமுகப்படுத்தப்போவதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.