பரபரப்பான சூப்பர் ஓவரில் இலங்கையை வீழ்த்தியது இந்தியா
ராசு (Author) Published Date : Sep 27, 2025 09:59 ISTSports News
ஆசிய கோப்பை 2025 கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான போட்டி, ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் வகையில் த்ரில் முடிவை எட்டியது. இரு அணிகளும் சமமான ரன்களை எடுத்ததால், ஆட்டத்தின் வெற்றி சூப்பர் ஓவர் மூலம் தீர்மானிக்கப்பட்டது.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, தொடக்க வீரர் அபிஷேக் ஷர்மாவின் அதிரடி ஆட்டத்தால் 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் குவித்தது. அபிஷேக் ஷர்மா அதிகபட்சமாக 61 ரன்கள் எடுத்து மிரட்டினார்.
203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியின் தொடக்க வீரர் பதும் நிசங்காவின் பேட்டிங் அனல் பறந்தது. அவர் அசத்தலாக சதம் அடித்து (107 ரன்கள்) தனது அணிக்கு வெற்றியை தேடிக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இலங்கையும் 20 ஓவர் முடிவில் சரியாக 5 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் எடுத்து போட்டியை சமன் செய்தது. இதனால், ஆட்டம் சூப்பர் ஓவருக்கு சென்றது.
வெற்றியைத் தீர்மானிக்கும் சூப்பர் ஓவரில், இந்திய அணி சார்பில் அர்ஷ்தீப் சிங் பந்துவீசினார். அவர் தனது துல்லியமான பந்துவீச்சால் இலங்கை அணியை திணறடித்தார். வெறும் 2 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றி இந்திய அணிக்கு சாதகமாக்கினார்.
வெறும் 3 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, ஒரு பந்திலேயே கேப்டன் சூர்யகுமார் யாதவ் 3 ரன்கள் ஓடி ஆட்டத்தை முடித்து வைத்தார். இதன்மூலம், இந்திய அணி த்ரில் வெற்றியைப் பெற்றது. இந்த ஆசிய கோப்பை தொடரின் மிகச் சிறந்த, விறுவிறுப்பான போட்டியாக இது அமைந்தது.