ரோஹித் சர்மா கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கம்
ராசு (Author) Published Date : Oct 06, 2025 15:11 ISTSports News
வரும் அக்டோபர் 19 ஆம் தேதி தொடங்கவிருக்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியின் பட்டியலை பிசிசிஐ தேர்வுக் குழு அறிவித்துள்ளது. இதில், இந்திய ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய விஷயம் என்னவென்றால், ரோஹித் சர்மா ஒருநாள் போட்டி கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, இளம் வீரர் ஷுப்மன் கில் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2024 ஆம் ஆண்டு ரோஹித் சர்மா தலைமையில் இந்தியா டி20 உலகக் கோப்பையையும், இந்த ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியையும் வென்றது. இவ்வளவு வெற்றிகளைப் பெற்ற கேப்டனை ஏன் நீக்க வேண்டும் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், சிலர் இதற்குப் பின்னால் பயிற்சியாளர் கௌதம் கம்பீரின் தலையீடு இருக்கிறதா என்றும் சர்ச்சையாகப் பேசி வருகின்றனர்.
இந்த விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் விதமாக, பிசிசிஐ தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கர் விளக்கம் அளித்துள்ளார், மூன்று விதமான ஃபார்மட்களுக்கும் (டெஸ்ட், ஒருநாள், டி20) மூன்று வெவ்வேறு கேப்டன்களை வைத்திருப்பது நடைமுறையில் சாத்தியமில்லை. நாங்கள் இப்போது இருந்தே ஷுப்மன் கில்லை கேப்டனாக நியமிப்பதன் மூலம், அவர் வருங்காலத்தில் இந்திய அணியை வழிநடத்துவதற்குத் தேவையான நல்ல அனுபவத்தைப் பெறுவார். 2027 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் ஐசிசி உலகக் கோப்பையை மனதில் வைத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது, என்று அஜித் அகர்கர் கூறியுள்ளார்.