ஆசிய கோப்பை 2025 வாழ்வா? சாவா? இன்று பாகிஸ்தான் vs இலங்கை பலப்பரீட்சை
ராசு (Author) Published Date : Sep 23, 2025 15:02 ISTSports News
ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றுப் போட்டிகள் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளன. இறுதிப் போட்டிக்கு முன்னேறப் போவது யார் என்பதைத் தீர்மானிக்கும் முக்கியமான போட்டி இன்று நடைபெறுகிறது. இன்றைய போட்டியில் பாகிஸ்தான் அணியும், இலங்கை அணியும் மோதவுள்ளன.
ஏற்கனவே சூப்பர் 4 சுற்றின் முதல் ஆட்டத்தில் இரு அணிகளுமே தோல்வியைச் சந்தித்துள்ளன. பாகிஸ்தான் அணி இந்தியாவிடம் தோல்வியுற்றது. அதேபோல், இலங்கை அணி வங்காளதேசத்திடம் தோல்வியைத் தழுவியது.
இந்நிலையில், இன்று நடைபெறும் போட்டியில் வெற்றி பெறும் அணி மட்டுமே இறுதிப் போட்டிக்கான வாய்ப்பைத் தக்க வைத்துக் கொள்ள முடியும். தோற்கும் அணி தொடரிலிருந்து வெளியேறும் அபாயத்தை எதிர்கொள்ளும். இதனால், இப்போட்டி இரு அணிகளுக்கும் வாழ்வா? சாவா? என்ற நிலையில் நடைபெறவுள்ளது.
இலங்கை அணி தங்கள் முதல் போட்டியில் தோல்வியுற்றிருந்தாலும், குழுச் சுற்றில் மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று வலுவான நிலையில் உள்ளது. பாகிஸ்தான் அணி இந்திய அணியுடன் இரண்டு முறை தோல்வியைச் சந்தித்துள்ளது. எனவே, இன்றைய போட்டி பாகிஸ்தான் அணிக்கு ஒரு கவுரவப் பிரச்சினையாகவும் மாறியுள்ளது.
அபுதாபியில் உள்ள ஷேக் சயத் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி இந்திய நேரப்படி இரவு 8 மணிக்குத் தொடங்குகிறது. வெற்றி யாருக்கு என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.