கரூர் சம்பவத்தை பற்றி பேசிய நடிகர் அஜித்
ராம் குமார் (Author) Published Date : Nov 04, 2025 12:25 ISTPolitics
நடிகர் அஜித் குமார் சமீபத்தில் அளித்த ஆங்கில ஊடகப் பேட்டி, சமூக வலைதளங்களில் தீவிரமாகப் பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக, கடந்த செப்டம்பர் மாதம் நடந்த துயரமான கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து அவர் பேசிய கருத்துக்கள் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளன.
கரூர் சம்பவம் குறித்துப் பேசிய நடிகர் அஜித் குமார், அந்த நிகழ்வுக்கு அந்த ஒருவர் மட்டும் காரணம் அல்ல நாம் எல்லோருமேதான் அதற்குக் காரணம், என்னையும் சேர்த்துதான் சொல்கிறேன், என்று அழுத்தமாகக் கூறியுள்ளார். மேலும் அவர், ஒரு கிரிக்கெட் மேட்ச் பார்க்கப் போனால், அந்த மாதிரி விஷயங்கள் (நெரிசல்) நடப்பது இல்லை. ஆனால், தியேட்டர்களுக்கோ அல்லது நடிகர்களைப் பார்க்கப் போகும்போதோதான் இந்த மாதிரியான விஷயங்கள் நடக்கின்றன.
கூட்டத்தைக் கூட்டுகிற அனைவருமே இதை ஒரு பெரிய விஷயமாகப் பார்க்கிறார்கள். அதை வைத்து நான் ரொம்பப் பெரிய ஆள் என்று நினைத்துக் கொள்கிறார்கள். அது ரொம்பவே தவறு, என அஜித் கூறியுள்ளார். நடிகர்களை ஹீரோவாகப் போற்றுவது மற்றும் அதிக கூட்டத்தை மையமாகக் கொண்ட கலாச்சாரம், திரையுலகின் பொதுப் பிம்பத்தை எதிர்மறையாகப் பாதிக்கிறது என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
நடிகர் அஜித்தின் இந்தக் கருத்து, கூட்டத்தைக் கூட்டும் மனப்பான்மை மற்றும் நட்சத்திர வழிபாட்டு முறையின் மீது ஒரு சமூக விமர்சனத்தை முன்வைத்துள்ளதாகப் பலரும் கருதுகின்றனர். இந்தத் துயரமான நிகழ்வுக்கு பொது சமூகம், ஊடகங்கள், ரசிகர்கள் மற்றும் சம்பந்தப்பட்டோர் எனப் பல தரப்பினருக்கும் பொறுப்பு உள்ளது என்ற அவரது பார்வை சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.