ஸ்விக்கி, சொமேட்டோவுக்கு போட்டியாக களமிறங்கும் புதிய டெலிவரி தளம்
ராம் குமார் (Author) Published Date : Sep 03, 2025 18:09 ISTஇந்தியா
நுகர்வோருக்கு நேரடியாக சேவை வழங்கும் சொமேட்டோ, ஸ்விக்கி ஆகிய உணவு விநியோக தளங்கள், உணவக உரிமையாளர்களிடம் இருந்து அதிகப்படியான கமிஷன் வசூலிப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இது தொடர்பாக உணவக உரிமையாளர்கள் சங்கங்கள், இரு நிறுவனங்களிடமும் பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த ஒரு பதிலும் அளிக்கப்படவில்லை.
சமீபத்தில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள உணவக உரிமையாளர்கள், சொமேட்டோ மற்றும் ஸ்விக்கி சேவைகளைப் புறக்கணிப்பதாக அறிவித்தனர். இதற்குப் பதிலாக, உணவகங்களுக்கு ZAAROZ என்ற புதிய உணவு விநியோக தளத்துடன் ஒப்பந்தம் செய்யத் தொடங்கினர்.
இதேபோல், தற்போது கரூரிலும் ZAAROZ சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த ZAAROZ சேவையின் சிறப்பு என்னவென்றால், உணவகங்களில் இருக்கும் அதே விலையிலேயே வாடிக்கையாளர்களுக்கு உணவு விநியோகம் செய்கின்றனர். மேலும், சொமேட்டோ மற்றும் ஸ்விக்கி நிறுவனங்கள் வாங்கும் கமிஷனுக்குப் பதிலாக, உணவக உரிமையாளர்களிடம் இருந்து மாதத்திற்கு 3000 சந்தா தொகையாக வசூலிக்கப்படுகிறது.
இதனால், பல உணவக உரிமையாளர்கள் சொமேட்டோ, ஸ்விக்கி போன்ற சேவைகளை ரத்து செய்துவிட்டு, ZAAROZ - ஐப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ZAAROZ சேவையை அறிமுகப்படுத்துவதே இவர்களுடைய முக்கிய இலக்காக உள்ளது. இது கூடிய விரைவில் நடக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.