முதல் திருமணத்தை சட்டப்படி விவாகரத்து செய்யாமல் இரண்டாவது திருமணம் செய்துகொள்வோருக்கு எதிராக, அசாம் மாநில அரசு ஒரு கடுமையான புதிய சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. சட்ட விரோதமான மற்றும் மோசடியான முறையில் இரண்டாவது திருமணம் செய்வோருக்கு கடுமையான சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய விதிகளின் முக்கிய அம்சங்கள்
- முதல் திருமணத்தை சட்டப்படி விவாகரத்து செய்யாமல், இரண்டாவது திருமணம் செய்பவர்களுக்கு 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
- முதல் திருமணத்தைப் பற்றிய உண்மையை மறைத்து, யாராவது இரண்டாவது திருமணம் செய்தால், அவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை கடுமையான சிறைத் தண்டனை வழங்கப்படும்.
- இந்தத் தவறைத் திரும்பத் திரும்பச் செய்பவர்களுக்கு, அதே தண்டனை இரு மடங்காக வழங்கப்படும்.
- இத்தகைய சம்பவங்களில் ஈடுபடும் நபர்களுக்கு அதிகமான அபராதமும் விதிக்கப்படும்.
- சட்டவிரோதமாக நடக்கும் இந்த இரண்டாவது திருமணத்திற்கு உடந்தையாக இருப்பவர்கள் அல்லது இதில் சம்மந்தப்பட்ட உறவினர்களுக்கும் தண்டனை உண்டு. அவர்களுக்கு 2 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் ரூ. 1.5 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.
அசாமின் இந்த கடுமையான சட்டம் குறித்த செய்தியைக் கேள்விப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த பலரும், இது ஒரு வரவேற்கத்தக்க நடவடிக்கை என்றும், இதேபோன்ற ஒரு கடுமையான சட்டத்தை தமிழ்நாட்டிலும் உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றும் சமூக வலைதளங்கள் வாயிலாகவும் பொதுவெளியிலும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

