பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள ஒரு நிகழ்வில், பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து வீடு திரும்பிய பெண் ஒருவரிடம், ரேபிடோ ஓட்டுநர் ஒருவர் போலியான செயலி மூலம் அதிக கட்டணம் வசூலிக்க முயன்றுள்ளார்.
பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து ஒரு பெண் தனது வீட்டிற்குச் செல்ல ரேபிடோ டாக்சியை புக் செய்துள்ளார். பயணியின் அதிகாரபூர்வ ரேபிடோ செயலியில் பயணக் கட்டணம் ரூ.532 எனக் காட்டப்பட்டுள்ளது. பயணம் முடிந்தவுடன், ஓட்டுநர் தனது மொபைலைக் காட்டி, கட்டணம் ரூ.650 என கூறியுள்ளார்.
கட்டண வித்தியாசம் காரணமாக சந்தேகம் அடைந்த அந்தப் பெண், ஓட்டுநரின் மொபைலை வாங்கிச் சரிபார்த்துள்ளார். ஓட்டுநரின் மொபைலில் இருந்த செயலியும் உண்மையான ரேபிடோ செயலி போலவே அதே லோகோ, அதே இடைமுகம் (Interface) என அச்சு அசலாக இருந்துள்ளது. ஆனால், கட்டணம் மட்டும் ரூ.650 எனக் காட்டப்பட்டுள்ளது. ஆழமாகச் சரிபார்த்தபோது, ஓட்டுநர் பயன்படுத்தியது போலியான செயலி என்றும், அதன் மூலம் கட்டணத்தை அவர் தானாகவே மாற்றியமைக்க முடியும் என்றும் தெரியவந்துள்ளது.
இந்த மோசடியில் மிக முக்கியமான, கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், அந்தப் பெண் பயணி உண்மையான ரேபிடோ செயலி மூலம் பயணத்தைத் தொடங்கியிருந்தாலும், ஓட்டுநர் போலி செயலியைப் பயன்படுத்தியதால், உண்மையான ரேபிடோ செயலியில் இந்தப் பயணத்தின் பதிவே இல்லை. அந்தப் பெண் கட்டணத்தைச் செலுத்தி இருந்தால், அவரால் திரும்ப பணத்தை பெறவோ அல்லது நிறுவனத்திடம் புகார் அளிக்கவோ முடியாத சூழல் ஏற்பட்டிருக்கும்.
இதே போன்ற சம்பவங்கள் மற்ற ஊபர், ஓலா, ரெட் டாக்ஸி போன்ற சவாரி சேவைகளிலும் நடைபெற வாய்ப்புள்ளது. எனவே, ரேபிடோ மட்டுமின்றி மற்ற கால் டாக்சி சேவைகளைப் பயன்படுத்தும் பயணிகளும் மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.