Policy pages

  Disclaimer Policy   Privacy Policy   Terms and Conditions

Social Media

Twitter Facebook
Copyright தமிழ் செய்திகள் 2024.
All Rights Reserved

தமிழக அரசின் புதிய கட்டுப்பாடுகள், ஊரடங்கு ஏப்ரல் 26 முதல்

தமிழக அரசின் புதிய கட்டுப்பாடுகள்

தமிழகத்தில் தினமும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இரண்டாவது அலையை கட்டுப்படுத்தும் வகையில் இரண்டாவது முறையாக தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.

ஏற்கனவே தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவித்திருந்த நிலையில், புதிய கட்டுப்படுகள் வரும் 26ஆம் தேதி ஏப்ரல், 2021 முதல் அமலுக்கு வரும் என அறிவித்துள்ளது.

தமிழக அரசின் 26-ஏப்ரல்-2021, புதிய கட்டுப்பாடுகள்.

அனைத்து திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், கேளிக்கைக் கூடங்கள், அனைத்து மதுக்கூடங்கள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள் போன்ற பொது மக்கள் அதிகம் கூடும் இடங்கள் இயங்க அனுமதி இல்லை.

பெரிய கடைகள், வணிக வளாகங்கள் இயங்க அனுமதி இல்லை. மளிகை, காய்கறிகடைகள் மற்றும் இதர அனைத்து கடைகளும் உரிய வழிமுறைகளை பின்பற்றி வழக்கம் போல் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. எனினும், வணிக வளாகங்களில் இயங்கும் பலசரக்கு கடைகள் மற்றும் காய்கறி கடைகளுக்கும் அனுமதி இல்லை.

தனியாக செயல்படுகின்ற மளிகை உட்பட பலசரக்குகள் மற்றும் காய்கறிகள் விற்பனை செய்யும் பெரிய கடைகள் குளிர்சாதன வசதி இன்றி இயங்க அனுமதிக்கப்படுகிறது. இவற்றில் ஒரே சமயத்தில் 50 வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்.

சென்னை மாநகராட்சி உட்பட அனைத்து மாநகராட்சிகள் மற்றும் அனைத்து நகராட்சிகளில், அழகு நிலையங்கள், சலூன்கள் இயங்க அனுமதி இல்லை.

அனைத்து உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படும். உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் உட்கார்ந்து உண்பதற்கு அனுமதியில்லை. விடுதிகளில் தங்கியுள்ள வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் தங்கியுள்ள அறைகளிலேயே உணவு வழங்க வேண்டும். உணவுக் கூடங்களில் அமர்ந்து உண்பதற்கு அனுமதி இல்லை.

அனைத்து மின் வணிக சேவைகள் வரையறுக்கப்பட்டுள்ள நேரக் கட்டுப்பாடுகளுடன் இயங்கலாம்.

அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொது மக்கள் வழிபாட்டிற்கு அனுமதி இல்லை. எனினும், தினமும் நடைபெறும் பூஜைகள் / பிரார்த்தனைகள் / சடங்குகளை, வழிபாட்டுத் தல ஊழியர்கள் மூலம் நடத்துவதற்கு தடையில்லை.

கொரோனா நோய்த் தொற்று அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, மதம் சார்ந்த திருவிழாக்கள் மற்றும் கூட்டங்களுக்கு 10.4.2021 முதல் தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், குடமுழுக்கு/திருவிழா நடத்துவதற்கு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித்தலைவர்/இந்து சமய அறநிலையத்துறை ஆணையரிடம் அனுமதி பெற்றிருந்தாலோ அல்லது குடமுழுக்கு நடத்த தேதி நிர்ணயம் செய்திருந்து முன்னேற்பாடுகள் செய்திருந்தாலோ, 50 நபர்கள் பங்கேற்புடன் நடத்திட அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

தற்போது, இந்த நடைமுறை மாற்றப்பட்டு, பொதுமக்கள் பங்கேற்பு இல்லாமல், கோயில் பணியாளர்கள் மட்டும் கலந்து கொண்டு, உரிய நடைமுறைகளை பின்பற்றி குடமுழுக்கு நடத்த மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது. புதிதாக குடமுழுக்கு / திருவிழா நடத்த அனுமதி இல்லை.

திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்ச்சிகளில் 50 நபர்களுக்கு மேல் பங்கேற்கக் கூடாது.

இறுதி ஊர்வலங்கள் மற்றும் அதைச் சார்ந்த சடங்குகளில் 25 நபர்களுக்கு மேல் பங்கேற்கக் கூடாது.

தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில் நுட்ப சேவை நிறுவனங்களில் குறைந்த பட்சம்

50 சதவீத பணியாளர்கள் வீட்டிலிருந்தே கண்டிப்பாக பணிபுரிய வேண்டும்.

கோல்ஃப், டென்னிஸ் கிளப் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு பயிற்சி சங்கம் / குழுமங்கள் செயல்பட அனுமதி இல்லை. எனினும், சர்வதேச மற்றும் தேசிய அளவிலான போட்டிகளுக்கான பயிற்சிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும்.

புதுச்சேரி தவிர்த்து, ஆந்திரபிரதேசம், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட அனைத்து மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் நபர்கள் http://eregister.tnega.org என்ற வலைதளத்தில் பதிவு செய்த விவரத்தினை தமிழ்நாட்டிற்குள் நுழையும்போது காண்பித்த பின்னரே அனுமதிக்கப்படுவர்.

வெளிநாட்டிலிருந்து தமிழ்நாட்டிற்கு விமானம் / கப்பல் மூலம் வரும் பயணியர் அனைவரும் http://eregister.tnega.org என்ற வலைதளத்தில் பதிவு செய்த விவரத்தினை தமிழ்நாட்டிற்குள் நுழையும்போது காண்பித்த பின்னரே அனுமதிக்கப்படுவர்.

ஏற்கனவே ஆணையிடப்பட்டவாறு, தனியார் மற்றும் அரசு பேருந்துகளில், இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும். பேருந்துகளில் நின்று கொண்டு பயணம் செய்ய அனுமதி இல்லை.

வாடகை மற்றும் டாக்ஸி வாகனங்களில், ஓட்டுநர் தவிர்த்து மூன்று பயணிகள் மட்டும் பயணிக்கவும், ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர்த்து இரண்டு பயணிகள் மட்டும் பயணிக்கவும் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருக்கும்.

தொழில் நிறுவனங்களுக்கான கொரோனா பொது முடக்ககால செயல்பாடுகள் தொடர்பாக, தமிழ்நாடு அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அரசாணைகள் எண் 346, நாள் 18.4.2021 மற்றும் எண் 348, நாள் 20.4.2021 ஆகியவற்றின்படி வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் எவ்வித மாறுதலும் இன்றி தொடர்கின்றன.

பணிக்கு செல்லும் பணியாளர்கள், பணிக்குச் சென்று வருகையில் தங்கள் நிறுவனம் வழங்கியுள்ள அடையாள அட்டையை தவறாமல் அணிந்து செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

அனைத்து தொழில் நிறுவனங்களும் அரசு வெளியிட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, முழுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் செயல்படுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

பொது மக்கள் வெளியில் செல்லும் போதும், பொது இடங்களிலும் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

பொது மக்கள் வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும் அடிக்கடி சோப்பை பயன்படுத்தி, கை கழுவுவதையும், வெளியிடங்களில் முகக் கவசம் அணிந்து செல்வதையும், சமூக இடைவெளியை தவறாமல் கடைப்பிடித்து, அவசிய தேவை இல்லாமல் வெளியில் செல்வதைத் தவிர்த்து, அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்கினால் தான், இந்த நோய்த்தொற்றை கட்டுப்படுத்த முடியும்.

மேலும், நோய்த்தொற்று அறிகுறிகள் தென்பட்டவுடன், பொதுமக்கள் உடனே அருகிலுள்ள மருத்துவமனைகளை நாடி மருத்துவ ஆலோசனை / சிகிச்சை பெற வேண்டும்.

தமிழக அரசின் புதிய கட்டுப்பாடுகள், ஊரடங்கு ஏப்ரல் 26 முதல்