இந்தியாவின் மிகப்பெரிய உள்நாட்டு விமானச் சேவை நிறுவனமான இண்டிகோ ஏர்லைன்ஸ் கடந்த சில நாட்களாகக் கடும் செயல்பாட்டுக் குழப்பத்தில் சிக்கியுள்ளது. ஒரே நாளில் 300 க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து மற்றும் 500 க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகப் புறப்பட்டதால், நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குழப்பத்திற்கான முக்கியக் காரணம் என்ன?
இண்டிகோ நிறுவனம் இந்த இடையூறுகளுக்குப் பல காரணங்களைக் கூறியிருந்தாலும், மிகவும் முக்கியமான காரணியாகக் கருதப்படுவது, விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையமான DGCA (Directorate General of Civil Aviation) புதிதாகக் கொண்டு வந்துள்ள FDTL (Flight Duty Time Limitations) என்ற விமானப் பணி நேர வரம்பு விதிகள் தான்.
FDTL புதிய விதிமுறைகள்
- விமானிகளுக்கு வாராந்திர ஓய்வு நேரம் 36 மணிநேரத்தில் இருந்து 48 மணிநேரமாக (2 நாட்கள்) அதிகரிக்கப்பட்டுள்ளது.
- விமானிகளின் அதிகபட்சப் பணி நேரம் 16 மணிநேரத்தில் இருந்து 11 மணிநேரமாக குறைக்கப்பட்டுள்ளது.
- இரவு நேரப் பயணங்கள் மீதான கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. முன்பு ஒரு விமானி ஒரு வாரத்தில் 6 இரவு நேரத் தரையிறக்கங்களைச் செய்ய அனுமதிக்கப்பட்ட நிலையில், இப்போது அது இரண்டாக குறைக்கப்பட்டுள்ளது.
இண்டிகோ ஏன் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளது?
இந்த DGCA விதிகள் அனைத்து விமான நிறுவனங்களுக்கும் பொதுவானவை என்றாலும், இண்டிகோ மிகப் பெரிய அளவில் பாதிக்கப்படக் காரணம், இண்டிகோ தினசரி சுமார் 2300-க்கும் மேற்பட்ட விமானங்களை இயக்குகிறது. மற்ற விமான நிறுவனங்களை ஒப்பிடுகையில், இண்டிகோ தனது விமானிகளையும் விமானங்களையும் அதிக அளவில் பயன்படுத்துகிறது.
புதிய FDTL விதிகள் நடைமுறைக்கு வந்த பிறகு, இவ்வளவு பெரிய நெட்வொர்க்கை இயக்கத் தேவையான போதுமான விமானிகளும் பணியாளர்களும் இண்டிகோவிடம் இல்லை என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. புதிய விதிகளுக்கு ஏற்பத் தங்களைத் தயார்படுத்திக் கொள்வதில் ஏற்பட்ட திட்டமிடல் இடைவெளியை (Planning Gaps) இண்டிகோ ஒப்புக்கொண்டுள்ளது.
மற்ற விமான நிறுவனங்கள் (ஏர் இந்தியா, ஸ்பைஸ்ஜெட் போன்றவை) இந்த மாற்றத்தை ஒரு குறிப்பிட்ட அளவிற்குச் சமாளித்துள்ள நிலையில், உள்நாட்டுப் பயணச் சந்தையில் 60% பங்கைக் கொண்டுள்ள இண்டிகோ, இந்த திடீர் மாற்றத்தால் நிலைகுலைந்துள்ளது.
இண்டிகோ மற்றும் DGCA எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன?
தொழில்நுட்பக் கோளாறுகள், மோசமான காலநிலை மற்றும் குளிர்கால அட்டவணை மாற்றங்கள் ஆகியவற்றுடன் புதிய FDTL விதிகளும் சேர்ந்து இந்தச் சிக்கலை உருவாக்கியுள்ளதாக இண்டிகோ தெரிவித்துள்ளது.
பயணிகளின் சிரமத்தைக் கருத்தில் கொண்டு, DGCA சில குறிப்பிட்ட FDTL விதிகளில், குறிப்பாக இரவு நேரப் பணிகளில், தற்காலிகத் தளர்வுகளை இண்டிகோவிற்கு வழங்கியுள்ளது. இந்தப் பாதிப்பைக் கட்டுப்படுத்தவும், செயல்பாடுகளைச் சீராக்கவும் விமான அட்டவணையில் கட்டுப்படுத்தப்பட்ட மாற்றங்களை (Calibrated adjustments) செய்து வருவதாகவும் இண்டிகோ கூறியுள்ளது.
ரத்து செய்யப்பட்ட விமானங்களுக்கான முழுப் பணத்தைத் திரும்ப வழங்குதல் , கட்டணமின்றி வேறு விமானத்திற்கு டிக்கெட்டை மாற்றித் தருதல் மற்றும் தாமதங்களுக்குப் பயணிகளுக்குச் சரியான முறையில் தகவல் அளித்தல் போன்ற நடவடிக்கைகளை இண்டிகோ எடுத்து வருகிறது.இந்தச் சிக்கல்களை முழுமையாகச் சரிசெய்து, செயல்பாடுகளைச் சீராக்கத் தங்களுக்கு 2026 பிப்ரவரி 10 வரை கால அவகாசம் தேவை என்று இண்டிகோ DGCA விடம் தெரிவித்துள்ளது.

