சினிமா திருட்டு கும்பலின் முக்கிய நபர் கைது


தெலுங்குத் திரையுலகிற்கு சுமார் ₹1000 கோடிக்கும் மேல் இழப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படும், திரைப்படத் திருட்டு இணையதளங்களான iBomma மற்றும் Bappam ஆகியவற்றின் முக்கிய குற்றவாளியான இம்மாதி ரவி என்பவரை ஹைதராபாத் சைபர் கிரைம் காவல்துறை கடந்த நவம்பர் 14ஆம் தேதி கைது செய்துள்ளனர்.
கைதானவர் ரவி இமாண்டி , 39 வயதுடையவர். விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த இவர், 2019 ஆம் ஆண்டு முதல் இந்த சட்டவிரோதச் செயலில் ஈடுபட்டு வந்துள்ளார். திரைப்படத் திருட்டு மூலம் இம்மாதி ரவி சுமார் ₹20 கோடி வரை மோசடியாகச் சம்பாதித்துள்ளார். இவரது செயல்களால் தெலுங்குத் திரையுலகிற்கு ஏற்பட்ட மொத்த நஷ்டம் ₹1000 கோடிக்கும் மேல் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
ரவி இமாண்டி தனது இணையதளங்களில் ஒரு வைரஸை உருவாக்கி வைத்திருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த இணையதளங்களில் இருந்து திரைப்படங்களை Download செய்தவர்களின் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் வங்கி விவரங்கள் அனைத்தும் ரவிக்குச் சென்றுள்ளன. இந்தத் தகவல்களை அவர் சைபர் குற்றவாளிகளிடம் விற்றுள்ளார்.
சட்டவிரோத இணையதளங்களில் இருந்து திரைப்படங்களைப் பதிவிறக்கம் செய்ததன் மூலம், உங்கள் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் வங்கி விவரங்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
கைது நடவடிக்கையின்போது ரவியிடமிருந்து பெறப்பட்ட Hard Disk இல் 21,000 க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் சேகரிக்கப்பட்டு, இணையதளங்களில் பதிவேற்றப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. வெளிநாடுகளில் உள்ள Server களை பயன்படுத்தி இவர் சட்டவிரோதமாகப் படங்களை வெளியிட்டு வந்துள்ளார்.
ரவியின் வங்கிக் கணக்கில் இருந்த சுமார் ₹3 கோடி தொகை தற்போது Block செய்யப்பட்டுள்ளது. புதிய திரைப்படங்களைப் போலியான இணையதளங்களில் வெளியிடுவதன் மூலம் ரவி கோடிக்கணக்கில் லாபம் ஈட்டியுள்ளார். அவரது கைது, திரைப்படத் திருட்டு கும்பல்களுக்கு விடுக்கப்பட்டுள்ள ஒரு கடுமையான எச்சரிக்கையாகக் கருதப்படுகிறது.