இந்தியாவின் மிகப்பழமையான ஆரவல்லி மலைத்தொடருக்கு ஆபத்தா?
இந்தியாவின் மிகப்பழமையான மற்றும் இயற்கை அரணாகக் கருதப்படும் ஆரவல்லி மலைத்தொடருக்கு தற்போது புதிய ஆபத்து ஏற்பட்டுள்ளதாகச் சமூக ஆர்வலர்கள் மற்றும் சுற்றுச்சூழல்...
இந்தியாவின் மிகப்பழமையான மற்றும் இயற்கை அரணாகக் கருதப்படும் ஆரவல்லி மலைத்தொடருக்கு தற்போது புதிய ஆபத்து ஏற்பட்டுள்ளதாகச் சமூக ஆர்வலர்கள் மற்றும் சுற்றுச்சூழல் வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சுமார் பல கோடி ஆண்டுகள் பழமையான இந்த மலைத்தொடர், தற்போது ஒரு சட்ட ரீதியான வரையறையால் தனது பாதுகாப்பை இழக்கும் நிலையில் உள்ளது.
வட இந்தியாவின் இயற்கை அரண்
குஜராத்தில் தொடங்கி ராஜஸ்தான், ஹரியானா வழியாகத் டெல்லி வரை சுமார் 700 கிலோமீட்டர் தூரத்திற்குப் பரந்து விரிந்து கிடக்கிறது ஆரவல்லி மலைத்தொடர். இது தார் பாலைவனத்திலிருந்து வீசும் மணல் புயலைத் தடுக்கும் ஒரு பெரும் சுவராகவும், நிலத்தடி நீரைப் பாதுகாக்கும் முக்கிய ஆதாரமாகவும் விளங்குகிறது.
சர்ச்சைக்குரிய 100 மீட்டர் வரையறை
தற்போது எழுந்துள்ள மிகப்பெரிய சிக்கல் என்னவென்றால், உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ள ஒரு புதிய வரையறையின்படி, கடல் மட்டத்திலிருந்து 100 மீட்டர் அல்லது அதற்கு மேற்பட்ட உயரம் கொண்ட நிலப்பகுதிகள் மட்டுமே ஆரவல்லி மலைத்தொடர் என அங்கீகரிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த உயரத்திற்குக் குறைவாக உள்ள பகுதிகள் மலைத்தொடர் என்ற வகைப்பாட்டிற்குள் வராது என்பதுதான் இந்தப் புதிய சர்ச்சையின் மையம்.
கார்ப்பரேட் நிறுவனங்களுக்குச் சாதகமாகுமா?
இந்த 100 மீட்டர் விதிமுறையைக் காரணமாக வைத்து, அந்த உயரத்திற்குக் குறைவாக உள்ள மலைப்பகுதிகளைக் கார்ப்பரேட் நிறுவனங்கள் எளிதாக ஆக்கிரமிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது. இதன் மூலம் சட்டவிரோதச் சுரங்கத் தொழில் காடுகளை அழித்தல் மற்றும் வணிக ரீதியான கட்டிடங்களை உருவாக்குதல் போன்ற செயல்கள் தடையின்றி நடக்கும் எனச் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இது ஒட்டுமொத்த ஆரவல்லி சூழலையே சிதைத்துவிடும் என்று அவர்கள் எச்சரிக்கின்றனர்.
பேராபத்தை நோக்கி டெல்லி?
ஆரவல்லி மலைத்தொடர் சிதைக்கப்பட்டால், டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் மிக விரைவில் பாலைவனமாக மாறும் அபாயம் உள்ளதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே காற்று மாசு மற்றும் தண்ணீர் தட்டுப்பாட்டில் சிக்கியுள்ள டெல்லிக்கு, ஆரவல்லியின் அழிவு என்பது மீள முடியாதப் பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது. நீதிமன்றத்தின் இந்த முடிவு மறுபரிசீலனை செய்யப்படுமா என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.