நவம்பர் 1 முதல் ஆதார் கார்டில் வரப்போகும் அதிரடி மாற்றங்கள்
ராசு (Author) Published Date : Oct 29, 2025 18:03 ISTஇந்தியா
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஆதார் அட்டை வைத்திருப்பவர்களுக்குப் பெரும் வசதியை அளிக்கும் விதமாக, நவம்பர் 1 ஆம் தேதி முதல் ஆதார் அப்டேட் விதிகளில் சில முக்கிய மாற்றங்களை அமல்படுத்தியுள்ளது. இதன் மூலம், பல்வேறு திருத்தங்களைச் செய்ய இனி சேவை மையங்களுக்குச் செல்ல வேண்டிய அவசியம் குறையும்.
ஆதார் அட்டைதாரர்கள் இனி தங்கள் பெயர், முகவரி, பிறந்த தேதி, மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி போன்ற விவரங்களை மாற்ற, ஆதார் சேவை மையங்களுக்குச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இந்தத் திருத்தங்கள் முழுவதுமாக ஆன்லைன் மூலமே செய்ய முடியும். நீங்கள் சமர்ப்பிக்கும் தகவல்கள், உங்கள் பான் கார்டு, பாஸ்போர்ட், ரேஷன் கார்டு போன்ற அங்கீகரிக்கப்பட்ட அரசு ஆவணங்களுடன் UIDAI யால் தானாகவே சரிபார்க்கப்படும். இதனால் ஆவணங்களைப் பதிவேற்றம் செய்யும் தேவையும் குறைகிறது.
இந்த புதிய அமைப்பு, அப்டேட் செயல்முறையை மிகவும் எளிமையாகவும், வேகமாகவும், காகிதமில்லாமலும் மாற்றியுள்ளது. நவம்பர் 1 ஆம் தேதி முதல் ஆன்லைன் அப்டேட் வசதி அமலாகிறது என்றாலும், ஆதார் சேவைகளுக்கான கட்டண உயர்வு ஏற்கனவே அக்டோபர் 1, 2025 முதல் அமலுக்கு வந்துவிட்டது.
1) பெயர், முகவரி, பிறந்த தேதி, மொபைல் எண் போன்ற மாற்றங்களுக்கான கட்டணம் ரூ.50-லிருந்து ரூ.75 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
2) கைரேகை, கண் ஸ்கேன் அல்லது புகைப்படம் போன்ற உயிர் அளவீடுகளைப் புதுப்பிக்க ஆகும் கட்டணம் ரூ.100 லிருந்து ரூ.125 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
3) குழந்தைகளின் எதிர்காலம் மற்றும் பாதுகாப்பு கருதி, 5 முதல் 7 வயது மற்றும் 15 முதல் 17 வயது வரையிலான குழந்தைகளுக்குப் பயோமெட்ரிக் தகவல்களைப் புதுப்பித்தல் முழுவதும் இலவசம்.
இந்த மாற்றங்கள் ஆதார் சேவையை மேலும் சுலபமாக்கும் அதே வேளையில், முக்கியமான அப்டேட்களுக்கான செலவையும் சற்று அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.