சிம்புவின் அரசன் படத்தில் இணைந்தார் விஜய் சேதுபதி
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்து வரும் அரசன் திரைப்படம், அறிவிப்பு வெளியான நாள் முதலே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை...
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்து வரும் அரசன் திரைப்படம், அறிவிப்பு வெளியான நாள் முதலே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் விதமாக ஒரு மாஸ் அப்டேட் வெளியாகியுள்ளது.
அரசன் படத்தை தயாரித்து வரும் பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு அவர்கள், தனது எக்ஸ் (X) சமூக வலைத்தளப் பக்கத்தில் ஒரு போஸ்டரை வெளியிட்டு, அதில் நடிகர் விஜய் சேதுபதி இப்படத்தில் இணைந்திருப்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
ஏற்கனவே சிம்புவும், விஜய் சேதுபதியும் மணிரத்னம் இயக்கிய செக்கச் சிவந்த வானம் திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்த நிலையில், தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் மீண்டும் இணைந்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரித்துள்ளது.
விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் என்னவாக இருக்கும் என்பது குறித்து ரசிகர்கள் பலவிதமான யூகங்களை வெளியிட்டு வருகின்றனர். ஒருபுறம், சிம்புவிற்கு வில்லனாக நடித்தால் மாஸாக இருக்கும் என்று ரசிகர்கள் பேசி வருகின்றனர்.
மற்றொருபுறம், வெற்றிமாறனின் பிளாக்பஸ்டர் திரைப்படமான வடசென்னை படத்திற்கான கதைக் களத்திலேயே அரசன் உருவாகி வருவதால், வடசென்னையில் அமீர் நடித்த ராஜன் கதாபாத்திரம் போன்ற ஒரு அழுத்தமான கேங்ஸ்டர் ரோலில் விஜய் சேதுபதி நடிப்பாரா என்றும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
சிம்பு, வெற்றிமாறன், விஜய் சேதுபதி, அனிருத் ஆகியோரின் இந்த மாபெரும் கூட்டணி அரசன் திரைப்படத்தை ஒரு மெகா ஹிட் படமாக மாற்றும் என்று தமிழ் திரையுலக வட்டாரங்கள் ஆவலுடன் எதிர்நோக்குகின்றன.