சிவகார்த்திகேயன் மீது திரும்பிய GOAT துப்பாக்கி

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ஜன நாயகன் படத்தின் முதல் சிங்கிள் பாடல், வெளியான குறுகிய நாட்களிலேயே 46 மில்லியன் (4.6 கோடி) பார்வைகளைக் கடந்து சாதனை படைத்தது. இந்த வியூஸ் எண்ணிக்கை குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு விவாதங்கள் எழுந்த நிலையில், தற்போது சிவகார்த்திகேயன் நடித்துள்ள பராசக்தி படத்தின் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட ஒரு பதிவு, இந்த விவாதத்தை வேறு கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது.

பராசக்தி திரைப்படத்தை தயாரித்து வரும் டான் பிக்சர்ஸ் நிறுவனம், தங்கள் படத்தின் முதல் சிங்கிள் பாடல் 13 மில்லியன் (1.3 கோடி) பார்வைகளை எட்டியதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அந்தப் பதிவில், 13 மில்லியன் ஆர்கானிக் வியூஸ் என்ற வார்த்தையை மிக முக்கியமாக ஹைலைட் செய்து குறிப்பிட்டிருந்தனர்.

ஆர்கானிக் வியூஸ் என்று குறிப்பிட்டு, மறைமுகமாக ஜன நாயகன் படத்தின் வியூஸ் குறித்து டான் பிக்சர்ஸ் கிண்டல் செய்துள்ளதாக விஜய் ரசிகர்கள் மத்தியில் ஒரு கருத்து எழுந்தது. இதுவே சமூக வலைதளங்களில் இருதரப்பு ரசிகர்களிடையேயும் கடுமையான மோதலுக்கு வித்திட்டது. இந்த வியூஸ் மோதலுக்கு மத்தியில், விஜய் ரசிகர்கள் நடிகர் சிவகார்த்திகேயனை டாக் செய்து (Tag) சமூக வலைதளங்களில் கமெண்ட் செய்து வருகின்றனர்.

விஜய் நடித்த GOAT (The Greatest of All Time) திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு முக்கியமான காட்சியில், விஜய் ஒரு துப்பாக்கியை சிவகார்த்திகேயனிடம் கொடுப்பார். இது, திரையுலகில் விஜய்யின் இடத்தைப் பிடிக்கும் ஒரு வாரிசாக சிவகார்த்திகேயன் பார்க்கப்படுவதாகப் பேசப்பட்டது.

இந்நிலையில், தற்போது பராசக்தி படக்குழுவின் பதிவால் ஆத்திரமடைந்த விஜய் ரசிகர்கள், தலைவா நீங்கள் GOAT படத்தில் சிவகார்த்திகேயனுக்கு கொடுத்த அந்த துப்பாக்கியை தயவுசெய்து திரும்பப் பெற்றுக் கொள்ளுங்கள், என்று கமெண்ட்டுகளில் பதிவிட்டு வருகின்றனர். ஒரு படக்குழுவின் ஆர்கானிக் வியூஸ் தொடர்பான ஒரு பதிவு, இரண்டு பெரிய நட்சத்திரங்களின் ரசிகர்கள் இடையே மோதலைத் தூண்டி, பழைய GOAT படக் காட்சியையும் மீண்டும் விவாதத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

Share on:

Latest Post