திரும்பவும் காமெடி களத்திற்கு திரும்பிய நடிகர் சந்தானம்
அசோக் (Author) Published Date : Oct 31, 2025 10:40 ISTபொழுதுபோக்கு
நடிகர் சந்தானம் மீண்டும் காமெடி வேடங்களில் நடிக்கவிருப்பதாக சமூக ஊடகங்களில் வெளியாகி வரும் தகவல்கள், அவரது ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளன. நீண்ட நாட்களுக்குப் பிறகு அவர் தனது அசல் பாணியான நகைச்சுவைக்கு திரும்புவது தமிழ் திரையுலகில் மீண்டும் ஒரு கலகலப்பை ஏற்படுத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் அதிக அளவில் பேசப்பட்டு வரும் தகவல் என்னவென்றால், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கவிருக்கும் ஜெயிலர் 2 திரைப்படத்தில் நடிகர் சந்தானம் ஒரு கேமியோ (Cameo) அல்லது முக்கியமான நகைச்சுவை வேடத்தில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த சில வருடங்களாக ஹீரோவாக மட்டுமே நடித்து வந்த சந்தானம், ரஜினிகாந்துடன் இணைவது இது 11 வருடங்களுக்குப் பிறகு நடக்கும் ஒரு நிகழ்வாக இருக்கும். இதற்கு முன், இருவரும் லிங்கா திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தனர்.
ஜெயிலர் முதல் பாகத்தில் யோகி பாபுவின் காமெடி பெரிதாகப் பேசப்பட்ட நிலையில், இரண்டாம் பாகத்தில் சந்தானத்தின் நகைச்சுவை இணைந்தால் அது படத்திற்கு கூடுதல் பலமாக அமையும் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஜெயிலர் 2 மட்டுமல்லாமல், தனது நெருங்கிய நண்பரான நடிகர் சிம்புவின் படத்துக்காகவும் சந்தானம் மீண்டும் காமெடிக்கு திரும்புகிறார் என்ற தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இயக்குநர் ராம் குமார் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் திரைப்படத்தில் ஒரு முக்கிய காமெடி கதாபாத்திரத்தில் சந்தானம் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சிம்பு - சந்தானம் கூட்டணியின் நகைச்சுவை டிராக், ரசிகர்களால் எப்போதும் கொண்டாடப்படுவது. இவர்களின் ரீ யூனியன், இந்தப் படத்தின் எதிர்பார்ப்பை உச்சத்திற்குக் கொண்டு சென்றுள்ளது.
சந்தானம் ஹீரோவாக நடித்து வந்தாலும், ரசிகர்கள் மத்தியில் அவருக்கான உண்மையான வரவேற்பு அவர் காமெடியனாக நடித்த காலத்தில் இருந்தே அதிகம். பலர் சமூக ஊடகங்களில், சந்தானம் மீண்டும் காமெடி வேடங்களில் நடித்தால் இன்னும் நன்றாக இருக்கும், என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.