விஜய் தொலைக்காட்சியின் முன்னணி தொகுப்பாளராகவும், எப்போதும் நகைச்சுவை உணர்வுடன் கலகலப்பாக இருப்பவருமான மா கா பா ஆனந்த், தற்போது ஒரு பெட்ரோல் பங்க் நிர்வாகத்தின் மீது மிகுந்த கோபத்தில் உள்ளார். சமீபத்தில் தனது சொகுசு காருக்கு டீசல் நிரப்புவதற்காக சென்னையில் உள்ள ஒரு பங்கிற்கு அவர் சென்றுள்ளார். டீசல் போட்டுவிட்டு சிறிது தூரம் பயணித்த சில நிமிடங்களிலேயே, அவரது கார் திடீரென பழுதடைந்து பாதியிலேயே நின்றது.

உடனே மெக்கானிக்கை அழைத்து காரைச் சோதனை செய்தபோதுதான் அந்த அதிர்ச்சியான உண்மை தெரியவந்தது. அவர் போட்ட டீசலில் பெருமளவு தண்ணீர் கலந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அவரது காருக்கு சுமார் 3 லட்சம் ரூபாய் வரை பழுதுபார்ப்புச் செலவு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த ஏமாற்று வேலையை நேரில் தட்டிக்கேட்க மீண்டும் அந்த பெட்ரோல் பங்கிற்குச் சென்ற மா கா பா, அங்கிருந்த ஊழியர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இனி டீசலையும் மக்களே வீட்டிலேயே தயாரிக்க வேண்டுமா?, என்று ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பிய அவர், அங்கிருந்த டீசல் மாதிரியை எடுத்து அதில் தண்ணீர் கலந்திருப்பதை வீடியோ ஆதாரத்துடன் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மக்களின் பணத்திற்கும், வாகனத்திற்கும் பாதுகாப்பில்லாத நிலை ஏற்பட்டுள்ளது, என அவர் பதிவிட்டுள்ள இந்த வீடியோ, தற்போது இணையத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது. இதைப் பார்த்த பல வாகன ஓட்டிகளும் தங்களுக்கு நேர்ந்த இது போன்ற கசப்பான அனுபவங்களை பகிர்ந்து, அந்த பங்க் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகின்றனர்.