நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள வா வாத்தியார் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. நீண்ட நாட்களாக இந்த படத்திற்காகக் காத்திருந்த ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில், படம் வரும் டிசம்பர் 12-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரெய்லர், ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. குறிப்பாக, ட்ரெய்லரில் கார்த்தி வரும் காட்சிகள், எம்.ஜி.ஆர் மற்றும் நம்பியார் போன்ற பழம்பெரும் நடிகர்களின் பாணியை நினைவூட்டும் வகையில் இருப்பதாக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் வைரலாகப் பேசி வருகின்றனர்.

சூது கவ்வும், காதலும் கடந்து போகும் போன்ற வித்தியாசமான வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் இந்தப் படம் உருவாகியுள்ளது. கார்த்திக்கு ஜோடியாக தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகை கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். இவர்களுடன் சத்யராஜ், ராஜ்கிரண் உள்ளிட்ட பல நட்சத்திரங்களும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இது கண்டிப்பாக ஒரு ஜாலியான என்டர்டெயினராக இருக்கும், என பலரும் ட்ரெய்லரை பார்த்துவிட்டு தங்கள் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். வா வாத்தியார் என்ற டைட்டிலுக்கு ஏற்றவாறு, கார்த்தி வாத்தியாராக என்ன செய்யப்போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்