காந்தாரா சாப்டர் 1 முதல் நாளே 60 கோடி வசூல்
அசோக் (Author) Published Date : Oct 03, 2025 11:57 ISTபொழுதுபோக்கு
நடிகர் ரிஷப் ஷெட்டி நடித்து, இயக்கியுள்ள பிரம்மாண்ட படமான காந்தாரா சாப்டர் 1 நேற்று (அக்டோபர் 2) திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
சுமார் 125 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டதாகக் கூறப்படும் இப்படம், வெளியான முதல் நாளிலேயே உலகளவில் கிட்டத்தட்ட 60 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகி, திரையுலகினரையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
படம் பார்த்த ரசிகர்கள் அனைவரும் காந்தாரா சாப்டர் 1 க்கு நல்ல விமர்சனங்களைக் கொடுத்து வருகின்றனர். பல ரசிகர்கள் கூறுவது என்னவென்றால், படத்தின் கடைசி 30 நிமிடங்கள் மிகச் சிறப்பாக இருந்ததாக பாராட்டிவருகின்றனர்.
ஏற்கனவே, இந்தப் படத்தின் முந்தைய பாகமான காந்தாரா வெறும் 16 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு, உலகம் முழுவதும் 400 கோடிக்கும் மேல் வசூலித்து மாபெரும் வெற்றி பெற்றது. அதன் தொடர்ச்சியாக தற்போது வெளியாகி இருக்கும் காந்தாரா சாப்டர் 1 படமும் ஒரு மிகப்பெரிய வசூல் வேட்டையைத் தொடங்கியுள்ளது.
இந்த மிரட்டலான வரவேற்பைப் பார்க்கும் ரசிகர்கள், இந்தப் படம் நிச்சயமாக 1000 கோடி வசூலைக் குவிக்கும் என்று சமூக வலைத்தளங்களில் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். ரிஷப் ஷெட்டியின் இந்தப் புதிய முயற்சி இந்தியத் திரையுலகில் மீண்டும் ஒரு சாதனையைப் படைக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.