காந்தா படம் எப்படி இருக்கிறது ?
நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் 1950-களின் சினிமா பின்னணியில் உருவான காந்தா திரைப்படம், இன்று (நவம்பர் 14) திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
காந்தா திரைப்படம் சினிமா உலகுக்குள் நடக்கும் ஈகோ மோதலை மையமாகக் கொண்ட கதையாக உள்ளது. படம் முழுவதும் கதை நிதானமாக, மெதுவாக நகர்ந்தாலும், அது சலிப்பைத் (Lag) தரவில்லை என்று ரசிகர்கள் ஒருமித்த கருத்தைத் தெரிவித்துள்ளனர். படம் மெதுவாத்தான் போகுது. ஆனால், கதையை விட்டு நம்மால வெளிய வர முடியல. அந்த அளவுக்கு ஈடுபாட்டோட (Engagement) படத்தைக் கொண்டு போயிருக்காங்க" என்று பார்வையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
படத்தின் திரைக்கதை மிகவும் விறுவிறுப்பாகவும், சஸ்பென்ஸுடனும் இருப்பதால், சில காட்சிகள் மெதுவாக இருந்தாலும் கூட பார்வையாளர்கள் தொடர்ந்து திரையைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பார்வையாளர்களை மிகவும் கவர்ந்ததில், இன்டர்வெல் காட்சியும் (Interval Block) மற்றும் கிளைமாக்ஸ் காட்சியும் முக்கியப் பங்கு வகிப்பதாக செய்திகள் வந்துள்ளன. இன்டர்வெல் காட்சி மிகவும் அழுத்தமாகவும், எதிர்பாராத திருப்பத்துடனும் அமைந்து, இரண்டாம் பாதியின் மீதான ஆர்வத்தை பல மடங்கு அதிகரிப்பதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். அதேபோல், படத்தின் கிளைமாக்ஸ் காட்சி உணர்ச்சிபூர்வமாகவும், கதையை நிறைவு செய்யும் வகையிலும் மிகச் சிறப்பாக எடுக்கப்பட்டுள்ளதாகப் பலரும் பாராட்டியுள்ளனர்.
இந்தப் படத்தில் நடித்துள்ள நட்சத்திரங்களின் பங்களிப்பு படத்துக்குப் பெரிய பலமாக உள்ளது என்று ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். உச்ச நட்சத்திரமான டி.கே. மகாதேவன் கதாபாத்திரத்தில் துல்கர் சல்மான் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். 1950-களின் சினிமா நட்சத்திரங்களின் உடல்மொழி, வசன உச்சரிப்பு என அனைத்து அம்சங்களிலும் அவர் நடிப்பின் சக்கரவர்த்தி, என்று ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். துல்கருக்கு தேசிய விருது நிச்சயம், என்றும் சில ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பழம்பெரும் இயக்குநராக வரும் சமுத்திரக்கனி தனது பாத்திரத்தில் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அவர் துல்கருடன் மோதும் ஈகோ காட்சிகள் படத்திற்கு கூடுதல் பலம். கதாநாயகி பாக்யஸ்ரீ போர்ஸ்-ன் நடிப்பும், அந்த காலகட்டத்து நடிகைகளின் தோற்றமும் கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்ப்பதாக ரசிகர்கள் பாராட்டியுள்ளனர். மொத்தத்தில், ஒரு கலைப் படைப்பாகவும், விறுவிறுப்பான கிரைம் த்ரில்லராகவும் 'காந்தா' படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது என்றே சொல்லலாம்.