குட் பேட் அக்லி திரைப்படம் நெட்ஃபிளிக்ஸிலிருந்து நீக்கப்பட்டுள்ளது
ராம் குமார் (Author) Published Date : Sep 18, 2025 17:51 ISTபொழுதுபோக்கு
நடிகர் அஜித் நடிப்பில் இந்த ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்ற குட் பேட் அக்லி திரைப்படம், தற்போது நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்திலிருந்து திடீரென நீக்கப்பட்டுள்ளது. இந்த அதிரடி நடவடிக்கையால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர். இதற்கு முக்கிய காரணமாக, இசைஞானி இளையராஜா தொடர்ந்த காப்பிரைட்ஸ் வழக்கு தான் என்று கூறப்படுகிறது.
படம் வெளியானபோது, தன்னுடைய அனுமதியில்லாமல் தனது பாடல்களைப் பயன்படுத்தியதாகக் கூறி, இளையராஜா தயாரிப்பு நிறுவனம் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில், இளையராஜாவின் பாடல்களைப் பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், நஷ்ட ஈடாக 5 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்றும், நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் இளையராஜா தரப்பில் கோரப்பட்டது.
நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகும், தயாரிப்பு நிறுவனம் பாடல்களை நீக்காமல் படத்தை ஓடிடியில் ஒளிபரப்பியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, நீதிமன்ற உத்தரவை மீறியதற்காக, தயாரிப்பு நிறுவனத்திற்கு மீண்டும் ஒரு நோட்டீஸை இளையராஜா தரப்பு அனுப்பியது. அதில், பாடல்களை உடனடியாக நீக்க வேண்டும் என்றும், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த தொடர் சட்டப் போராட்டங்களின் விளைவாக, தற்போது நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்திலிருந்து குட் பேட் அக்லி திரைப்படம் நீக்கப்பட்டுள்ளது. இதனால், தயாரிப்பு நிறுவனம் அடுத்தகட்டமாக என்ன முடிவு எடுக்கும், ரசிகர்கள் படத்தை மீண்டும் பார்க்க முடியுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. இந்த விவகாரம் திரைப்பட உலகில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.