ஜீனி படத்தின் பாடலால் சர்ச்சையில் சிக்கிய கல்யாணி பிரியதர்ஷன்
அசோக் (Author) Published Date : Oct 11, 2025 09:46 ISTபொழுதுபோக்கு
லோகா சாப்டர் 1 சந்திரா என்ற மாபெரும் வெற்றிப் படத்தின் மூலம் இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக உருவெடுத்துள்ள கல்யாணி பிரியதர்ஷன், தற்போது நடிகர் ஜெயம் ரவியின் ஜீனி திரைப்படத்தின் அப்டி அப்டி அப்டி பாடல் மூலம் சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகியுள்ளார். இந்தப் பாடலில் அவர் நடிகை கீர்த்தி ஷெட்டியுடன் இணைந்து கவர்ச்சியாக நடனமாடியதுதான் சர்ச்சைக்குக் காரணம். லோகா போன்ற தரமான படத்தில் நடித்த ஒரு நடிகை, ஏன் இது போன்ற ஐட்டம் பாடல்களில் ஆடுகிறார் என்று ஒருபுறம் ரசிகர்கள் விமர்சிக்க, மற்றொருபுறம், ஒரு நடிகையின் நடிப்பை நடிப்பாகப் பார்க்க வேண்டும் என்றும், அவர் எல்லா வகையான பாத்திரங்களிலும் நடிக்கலாம் என்றும் ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்த சர்ச்சை குறித்துப் பேசிய நடிகை கல்யாணி பிரியதர்ஷன், ஒரு நடிகையாகத் தான் எப்போதும் புதிய சவால்களை முயற்சிக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். அவர் தனது விளக்கத்தில், ஒரு நடிகையாக, என்னால் செய்ய முடியாத விஷயங்களைச் செய்ய எப்போதும் முயற்சி செய்கிறேன். இந்தப் பாடல் அந்த தருணங்களில் ஒன்றாகும். எங்கள் இயக்குனர் புவனேஸ், ஒரு கமர்ஷியல் பாடலை ஜீனி படத்தின் கதையில் ஒரு நிஜமான மற்றும் முக்கியமான பகுதியாக மாற்றிய விதத்தைப் பார்த்து நான் ஆச்சரியப்பட்டேன் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்தப் பாடலுக்குப் பின்னால் உள்ள காரணங்கள் மிகவும் வலிமையானவை. அது படத்தைப் பார்த்த பிறகுதான் உங்களுக்குப் புரியும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
கல்யாணி பிரியதர்ஷனின் இந்த விளக்கத்துக்குப் பிறகு ரசிகர்கள் சிலர் சமாதானம் அடைந்து, அவருடைய முயற்சிக்கு வாழ்த்துத் தெரிவித்தாலும், வேறு சிலர், உங்களுடைய வெற்றிக்கு லோகா படத்தின் தரம்தான் காரணம். இனிமேல் இது போன்ற கமர்ஷியல் பாடல்களில் ஆடி உங்கள் திறமையையும், இமேஜையும் வீணாக்க வேண்டாம் என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.