பைசன் வெற்றிவிழாவில் கோவமாக பேசிய மாரி செல்வராஜ்
அசோக் (Author) Published Date : Oct 27, 2025 11:47 ISTபொழுதுபோக்கு
துருவ் விக்ரம் நடித்த பைசன் திரைப்படத்தின் வெற்றியை ஒட்டி நடந்த நிகழ்ச்சிகள் மற்றும் செய்தியாளர் சந்திப்புகளில் இயக்குநர் மாரி செல்வராஜ் பேசிய கருத்துக்கள் சமூக ஊடகங்களில் புதியதொரு சர்ச்சையைக் கிளப்பியுள்ளன. தனது முந்தைய படங்களைப் போலவே பைசன் படமும் சாதியப் பாகுபாடுகளைப் பேசியிருப்பதால், ஏன் இதுபோன்ற படங்களையே தொடர்ந்து எடுக்கிறீர்கள் என்ற கேள்வி மீண்டும் மீண்டும் தனக்குக் கேட்கப்படுவதாக அவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். தயவு செய்து யாரும் இனி என்னிடம் இப்படிக் கேட்க வேண்டாம். இது என்னைப் பாதிக்கிறது, என்று அவர் உணர்ச்சிப்பூர்வமாகப் பேசினார்.
தன்னுடைய படங்கள் குறித்து எழுந்த கேள்விகளுக்குப் பதிலளித்த மாரி செல்வராஜ், தான் தனது நிலைப்பாட்டில் இருந்து ஒருபோதும் மாறப்போவதில்லை என்பதைத் திட்டவட்டமாக அறிவித்தார். நான் ஏற்கனவே பலமுறை சொல்லிவிட்டேன். ஆனாலும் எல்லோரும் அதே கேள்வியைக் கேட்கிறீர்கள். ஒரு விஷயம் மட்டும் தெரிந்துகொள்ளுங்கள் மாரி செல்வராஜ் படம் என்றால் இப்படித்தான் இருக்கும். என் வாழ்வில் நான் சந்தித்த வலியும், சமூகத்தில் இன்றும் நிலவும் உண்மைகளும்தான் எனது படைப்புகளாக வெளிவரும், என்று அவர் தனது படைப்பு அடையாளத்தை தெளிவுபடுத்தினார்.
மேலும், அவர் தனது பேச்சின் முக்கிய அம்சமாக, தனது எதிர்காலத் திரைப்படங்களின் திசையையும் அறிவித்துள்ளார். இனி நான் எடுக்கப்போகும் படங்களும் சாதி எதிர்ப்புப் படங்களாகத்தான் இருக்கும். சமூகத்திற்குள் இருக்கும் சாதியைக் கடந்து வர வேண்டும் என்பதற்காகவே வேதனையுடன் படங்கள் எடுக்கிறோம். சாகும் வரை இந்தச் சாதி எதிர்ப்பைப் பேசும் எனது பயணம் தொடரும், என்று அவர் ஆணித்தரமாகக் கூறினார். இந்தத் துணிச்சலான அறிவிப்பு, தமிழ் சினிமாவில் சமூக நீதி மற்றும் அரசியல் கருத்துக்கள் குறித்த விவாதங்களைத் தீவிரப்படுத்தியுள்ளது.